+91 9443946178
info@thalaivarsaravananparigaracentre.com
Language: தமிழ்

மகுடேஸ்வரர்

இந்த கொடுமுடி திருக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு இவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் காணலாம். காவிரி நதி ஓடிக்கொண்டிருக்கும் திசையில் இருந்து மேற்கு கரையில் கொடுமுடி நாதர் கோவில் அமைந்துள்ளது. கிழக்கு திசை பார்த்து அமைந்துள்ள இந்த கோவில் மிகவும் பிரம்மாண்டமானது. இந்த கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவருக்கும் தனித்தனி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடு கோபுர வாயிலின் வழியாக சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மனை தரிசனம் செய்யலாம். நடுவாயிலுக்கு வடபுறம் உள்ள கோபுர வாசல் வழியாக உள்ளே சென்றால் மூலவர் கொடுமுடி நாதரை தரிசிக்க முடியும். இந்த கோவிலில் வீற்றிருக்கும் லிங்கமானது சுயம்பு லிங்கமாகும். அகத்தியர் இத்தலத்தில் சிவலிங்கத்தை பூஜை செய்ததற்கு அடையாளமாக லிங்கத்தின் மீது விரல் தடயங்கள் உள்ளதை காணலாம்.

தல வரலாறு

ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது. அந்தப் போட்டியில் மேருமலையை ஒரு கயிறு கட்டி ஒரு பக்கம் ஆதிசேஷனும், மறுபக்கம் வாயு தேவனும் இழுத்தனர். ஆதிசேஷன் மேரு மலையை தன் கைகளால் கட்டி அணைத்துக் கொண்டார். வாயு பகவான் அவரது காற்றின் வேகத்தால் ஆதிசேஷனை மலையை விட்டு மேலிருந்து கீழே தள்ள, காற்றை வேகப்படுத்தி வீசினார். இதனால் மேரு மலையானது அழுத்தம் தாங்காமல் ஏழு துண்டுகளாக வெடித்து சிதறியது. வெடித்த துண்டுகள் அனைத்தும் ரத்தின கற்களாக மாறி லிங்கமாக உருமாறியது. அதில் ஒன்றுதான் கொடுமுடி. இந்த தலத்தில் வைர கல்லாலான லிங்கம் உள்ளது. இந்த லிங்கமே மகுடேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கோயில் வளாகத்தில் வடக்கில் மகுடேசுவரர், தெற்கில் வடிவுடைநாயகி அம்மன், நடுவில் பள்ளிகொண்ட நிலையில் வீரநாராயணப் பெருமாள் சன்னதிகளும் உள்ளன. தென்மேற்கு மூலையில் ஆஞ்சனேயர், பெருமாள் கோயிலுக்குத் தெற்கில் திருமங்கை நாச்சியார் சன்னதியும் அதன் முன்பே வன்னி மரமும், பிரம்மன் சன்னதியும் உள்ளன.

வன்னிமரம்

மகுடேசுவரர் கோயிலின் தல விருட்சமான வன்னி மரம் கோயில் வளாகத்தில் உள்ளது. 2000 ஆண்டு பழமையான இம்மரத்தின் ஒருபுறக் கிளைகள் முற்களுடனும், மறுபுறம் முட்கள் இல்லாமலும், பூக்காமல், காய்க்காமல், தெய்வீகத் தன்மையுடன் திகழ்கிறது. வன்னிமர இலைகளைக் காவிரி தீர்த்தக் கலசத்தில் இட்டுப் பழனியாண்டவர் மற்றும் இதர தெய்வங்களைப் பூஜிக்கப் பக்தர்கள் கொண்டு செல்கின்றனர்.

பிரம்மா வீற்றிருக்கும் வன்னி மரத்தை 12 (கால் மண்டலம்), 24 (அரை மண்டலம்), 48 (ஒரு மண்டலம்), வயதின் எண்ணிக்கை, 108 முறை வலம் வந்து அருள் பெறுகின்றனர். இம்மரத்தினை பிரதட்சிணம் செய்வதால், சனி, குரு, ராகு, கேது போன்ற கிரக தோஷங்களில் நிவாரணம் பெறுகின்றனர்.

சனி பகவானுக்கு உரிய மரமாகவும் அவிட்ட நட்சத்திரக்காரர்களின் விருட்சமாகவும் வன்னி மரம் போற்றப்படுகிறது. பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்திருந்தபோது, தனது ஆயுதங்களை வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

நான்கு கரங்களுடன் அட்சமாலை கமண்டலத்துடன் மூன்று முகம் கொண்ட பிரம்மா வன்னி மரத்தடியில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பிரம்மாவை வழிபடுவதால், பூர்வ புண்ணிய தோஷ நிவர்த்தி, பசு, பட்சி, பிராமண சாபம் மற்றும் பல்வேறு கிரக தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெற முடியும்.

பரிகாரத் தலம்

கொடுமுடி மகுடேசுவரர் கோயிலில் ராகு, கேது, செவ்வாய் தோஷ நிவர்த்திக்கான பரிகார பூஜைகள், ஆயுள் ஹோமம், நவக்கிரக தோஷ பரிகார ஹோமம், உடல் ஆரோக்கியத்திற்காகத் தன்வந்திரி பகவானுக்கான ஹோமம், தொழில் வளர்ச்சி, குழந்தைகள் கல்வி எனப் பல்வேறு ஹோமங்கள் அர்ச்சகர்களால் நடத்தி வைக்கப்படுகின்றன.

திருமணமாகாத ஆண், பெண்கள் காவிரியில் நீராடி, பரிகார பூஜைகளை மேற்கொண்டால் உடனடி பலன் பெற முடியும். இவ்வாறு பரிகார பூஜையால் பலன் பெற்றோர், கொடுமுடி கோயிலிலேயே திருமணம் செய்துகொள்ள வருவதால், முகூர்த்த நாள்களில் திருவிழாக் கூட்டம் கோயிலில் இருக்கும்.

பூஜைகளை மேற்கொள்ளும் வேதியருக்குத் தேவையான பூஜைப்பொருள்கள், அவருக்கான கட்டணம் போன்றவற்றைப் பக்தர்கள் செலுத்த வேண்டும். பரிகார பூஜைகள் பற்றிய தகவல்களைத் (+91 9443946178) தொடர்புகொண்டு கேட்டுப் பெறலாம்.

விழாக் காலங்கள்

கொடுமுடி மகுடேசுவரர் - வீரநாராயணப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விழா விமர்சையாக நடந்தேறி வருகிறது. இந்த நாள்களில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் எழுந்தருளி அருள்பாலிப்பர். சித்திரைத் திருவிழாவின் 10ம் நாள் மகுடேசுவரர், வீரநாராயணப் பெருமாள், விநாயகர் தனித்தனித் தேர்களில் திருவீதி உலா வருவர்.

ஆடி 18 திருவிழாவின்போது, மூர்த்திகள் காவிரிக்கு எழுந்தருளி அருள்பாலிப்பர். அன்றைய இரவில், பச்சை மண்ணில் தாலி செய்து அதில் மாவிளக்கு, பொட்டு, விளக்கு காரை, காதோலை, கருகமணி, சிற்றாடை, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து காவிரி ஆற்றில் விட்டு வருவர். ஆடி மாதத்தில் அம்மனுக்கும், லட்சுமிக்கும் சந்தனக்காப்பு ஆராதனை நிகழும். சிவராத்திரிகளில் இரவில் நான்கு காலங்களிலும் அபிஷேக ஆராதனை நடைபெறும்.

போக்குவரத்து வசதி

ஈரோட்டில் கரூர் செல்லும் சாலையில் 40 கிலோ மீட்டர் தொலைவில் கொடுமுடி உள்ளது. கரூர்-ஈரோடு சாலையில் 27 கிலோ மீட்டர் தொலைவிலும் கொடுமுடி உள்ளது. ஏராளமான பேருந்துகள், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை, கேரள மாநிலம் மங்களூர், கர்நாடக மாநிலம் மைசூர் போன்ற இடங்களிலிருந்து ரயில் வசதி உள்ளது.

விமான பயணம் மேற்கொள்வோர் திருச்சி, கோவை, சேலம் ஆகிய விமான நிலையங்களிலிருந்து சாலை அல்லது ரயில் வழியாக கொடுமுடி திருத்தலத்தை அடையலாம்.

தனியார் தங்கும் விடுதி மற்றும் பரிகார பூஜைகள் பற்றிய தகவல்களைத் (+91 9443946178, +91 9443946222) தொடர்புகொண்டு கேட்டுப் பெறலாம்.